தற்போதைய செய்திகள்

தொடர்ச்சியான தொடர்களை குறைக்க வேண்டும் - வார்னர்
  • 19th February 2018

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை நடைபெற்றது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜனவரி 14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. பிப்ரவரி 3-ம் தேதி முதல் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

கிரிக்கெட் விளையாடுவதில் முன்னணி அணியாக திகழும் ஆஸ்திரேலியா, தொடர்ந்து விளையாடும் வகையில் போட்டி அட்டவணையை தயார் செய்துள்ளது. இந்த சீசனில் டேவிட் வார்னர் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஆஷஸ் தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் வார்னர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் சொதப்பினார்.

பின்னர் ஒன்றிரண்டு நாட்கள் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. பின்னர் நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

இரண்டு தொடர்களுக்கும் இடையில் கால இடைவெளி இல்லாமல் தொடர்ந்து விளையாடும் வகையில் போட்டி அட்டவணையை தயார் செய்துள்ள கிரிக்கெட் வாரியம், அதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வார்னர் அறிவிறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வார்னர் கூறுகையில் ‘‘நாங்கள் சிறப்பாக விளையாடினாலும், கூட வீரர்களுக்கு கட்டாயம் ஓய்வு தேவைப்படும். ஆஷஸ் தொடருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கும் இடையிலான இடைவெளி மிகவும் குறைவானதாகும். இங்கிலாந்து அணியில் நான்கு ஐந்து வீரர்கள் மட்டுமே ஒருநாள் தொடரில் இடம்பிடித்துள்ளார். கிறிஸ் வோக்ஸைத் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் இடம்பெறவில்லை. இதைபோல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் செய்தால் எங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

தொடர்ந்து போட்டியில் விளையாடுவது மனநிலை அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போதைய டி20 அணியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், பிக் பாஷ் தொடரில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். இதை நாம் ஏன் ஆஷஸ் தொடரின்போது உதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்றார்.

comments powered by Disqus