தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் சிலிண்டர் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு
  • 18th February 2018

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தின் பீவார் பகுதியில் உள்ள ஓட்டலில் திருமண விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அந்த விழாவில் 2-வது மாடியில் உள்ள சமையல் கூடத்தில் சமையல் வேலைகள் நடைபெற்று கொண்டிருந்தது.
 
அப்போது திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.
 
தகவலறிந்து அங்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில், சிலிண்டர் வெடித்து சிதறிய இடத்தில் கிடந்த இடிபாடுகளில் இருந்து இன்று காலை மேலும் 9 பேரின் உடல்களை போலீசார் மீட்டுள்ளனர்.
 
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், இடிபாடுகளில் உடல்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினரும், ராணுவத்தினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இன்று காலை 9 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரின் உடல்கள் புதைந்து கிடப்பதக தெரிகிறது. இதையடுத்து, சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

comments powered by Disqus